மத்திய அரசு படிப்படியாக தமிழ் வானொலி நிலையங்களை அடைக்கவிருப்பதாக எம்.பி வெங்கடேசன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து எம்.பி வெங்கடேசன் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, பிரசார் பாரதி, “ஒரு மாநிலத்தில் ஒரு முதன்மை நிகழ்ச்சி தயாரிப்பு நிலையம்” என்று நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருக்கிறது என்றும் பொங்கல் பண்டிகை முதல் அது செயல்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியானது. தமிழகத்தில், மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, புதுச்சேரி, திருச்சி மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களில் வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த வானொலி நிலையங்கள் உள்ளூர் பண்பாட்டின் முக்கியத்துவம், நாட்டுப்புறக்கலைகள், பன்மைத்துவம், மாநிலத்தின் மொழி வளர்ச்சி போன்ற பலவற்றை மக்களுக்கு அளித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ள வானொலி நிலையங்களை ஒளிபரப்பு நிலையங்களாக மாற்றவுள்ளதாகத் தகவல் வெளியாகியது.
அதன்படி, இனிமேல் வாரத்திற்கு 5 மணிநேரங்கள் தான் உள்ளூர் தொடர்பான நிகழ்ச்சிகளை இந்த வானொலி நிலையங்கள் ஒளிபரப்ப முடியும் என்று தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, வானொலி நிலையத்தில் ஒளிபரப்பப்படும் விஷயங்களை ஸ்மார்ட் போன் வழியாக கேட்கக்கூடிய அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.
இந்நிலையில் மத்திய அரசு, வானொலி நிலையங்களை படிப்படியாக அடைப்பது ஏற்கக் கூடியது அல்ல. வானொலி நிலையங்களின் செயல்பாடு முடக்கப்பட்டால், பணிவாய்ப்பு இழப்பு, பணியாளர்களுக்கு பாதிப்பு போன்ற விளைவுகள் ஏற்படும். எனவே, இத்தீர்மானத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.