இலங்கையில் விசா வழங்கப்படுவது நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல் தவறு என்று இந்திய தூதரகம் விளக்கமளித்திருக்கிறது.
இலங்கை அரசு, தவறான கொள்கை முடிவுகளை கையாண்டதால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே, மக்கள் ஒரு மாதத்தைத் தாண்டி தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியா மற்றும் சீனா போன்ற பல நாடுகள் இலங்கைக்கு உதவிகளை செய்து கொண்டிருக்கின்றன.
இதனிடையே அதிபர் கோட்டபாய ராஜபக்சே முன்னிலையில், அந்நாட்டின் 26-ஆம் பிரதமராக நேற்று ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றிருக்கிறார். இந்நிலையில் இலங்கையில் விசா வழங்கப்படுவது நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்திய தூதரகம் இந்த தகவல் தவறானது என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது, விசா வழங்கப்படுவது நிறுத்தப்பட்டதாக வெளியான செய்தி தவறான தகவல். விசா பிரிவில் பணிபுரியக்கூடிய நபர்களில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பதால் பணியில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. எனவே இயல்பு நிலைக்கு திரும்ப தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறது.