தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணைக் குழு, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பலதரப்பட்ட மக்கள் இடையே விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த ஒருநபர் கமிஷனின் 16ஆவது கட்ட விசாரணை இன்று தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. இதில் ஆஜராக வந்த சமூகச் செயற்பாட்டாளர் முகிலன், விசாரணைக்குப் பின் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை அழைத்து விசாரிக்கக் கோரி முழக்கமிட்டார்.
இந்நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக காவல் துறைக்கு எதிரான வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து அவர் மாயமானார். சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு அவர் திருப்பதியில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, தமிழ்நாடு அழைத்து வரப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, மாவட்ட அரசு சுற்றுலா மாளிகையில் அமைந்துள்ள ஒரு நபர் கமிஷன் ஆணையத்தில் இன்று (நவம்பர் 12ஆம்) தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒருநபர் கமிஷன் சம்மன் அனுப்பியது. அதன்பேரில் தனது தரப்பு விளக்கத்தை அளிப்பதற்காக முகிலன் பலத்த காவல் பாதுகாப்புடன் இன்று ஒரு நபர் கமிஷனுக்கு அழைத்து வரப்பட்டு, நீதிபதி அருணா ஜெகதீசன் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார். சுமார் 6 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த விசாரணையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன், நீதிபதி அருணா ஜெகதீசனிடம் வாக்குமூலம் அளித்தார்.
இதற்கிடையே நீதிபதி அருணா ஜெகதீசனை சந்தித்து விளக்கம் அளிப்பதற்காக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமாபாபு ஒரு நபர் கமிஷன் வந்தார். அப்பொழுது அங்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தினார். விசாரணை முடிந்தவுடன் நீதிபதியின் அனுமதி பெற்று உள்ளே செல்லலாம் என காவல்துறையினர் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து, அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து 6 மணி நேர விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த முகிலனை, காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அப்போது, காவல் துறை வாகனத்தில் இருந்தபடியே ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ்க்கு பின்புலம் உள்ளதாக சொன்ன காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று முகிலன் முழக்கமிட்டுச் சென்றார். அப்போது கூடியிருந்த முகிலன் ஆதரவாளர்கள் ஆதரவான முழக்கங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.