தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுவனங்களில் பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அந்த வகையில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸும் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடு இருப்பதாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். இந்த தகவல்களுக்கு தற்போது பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியதாவது, தமிழகத்தில் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடுகள் இருப்பதாக வரும் தகவல்களில் உண்மை கிடையாது. போதிய அளவு பால் கொள்முதல் செய்யப்படுவதோடு மக்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.
கடந்த ஆட்சியில் 26 லட்சம் லிட்டராக இருந்த பால் விற்பனை தற்போது 28 லட்சமாக அதிகரித்துள்ளது. அதன் பிறகு ஆரஞ்சு நிற பால் பாக்கெட் பொதுமக்களுக்கு 46 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் வணிகம் செய்யும் நபர்களுக்கு மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தனியார் கம்பெனிகளை விட 10 ரூபாய் குறைவாக தான் அதுவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் பால் நிறுவனத்தில் பால் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக வரும் தகவல்களில் உண்மை கிடையாது. ஒரு நாளைக்கு 65 லட்சம் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார். மேலும் அமைச்சர் நாசர் சொன்ன தகவலால் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.