தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பதற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம் நடத்துகின்றது.
தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு அதிமுக கூட்டணியில் உள்ள பாமக பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒரே நேர்கோட்டில் நின்று டாஸ்மார்க் திறப்புக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இன்று போராட்டம் அறிவித்துள்ளது. அந்த வகையில் திமுக போராட்டம் குறித்து அக்கட்சியின் இளைஞர் அணி பொதுச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறதே, தவிர குறைந்தபாடில்லை.
பாதிக்கப்பட்டவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தனிமைப்படுத்துவது, கொரோனா சோதனைகளை குறைவாக நடத்தப்பட்டது, ஊரடங்கை சரியாக நடைமுறைப்படுத்தாதது என்று இதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். இந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளை இன்று முதல் திறக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த அரசிடம் போதுமான நிதி இல்லை, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் திறந்துள்ள மதுக்கடைகளில் நம் மக்கள் மது வாங்கக் கூடுகிறார்கள். இதனால் நமக்கு வரவேண்டிய வருமானம் அவர்களுக்கு போகிறது. அதனால் இங்கு கடைகளை திறக்கிறோம் என்று அதற்கு காரணம் வேறு சொல்கின்றனர்.
நமக்கு வர வேண்டிய நிதியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற தகுதியற்ற எடப்பாடி அரசு, கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவே டாஸ்மாக் கடையை திறப்பதாக கூறியுள்ளது மக்களின் மீது அக்கறையற்ற அபத்த செயல்.
அதாவது ஒரு பக்கம் நோயை குணப்படுத்த மருத்துவம் பார்ப்பது, மறுபக்கம் டாஸ்மார்க்கில் கூடுபவர்கள் மூலம் நோய்யை பரப்புவது… இதுதான் அடிமை அரசின் கொள்கையா? தவிர ஊர் அடங்கினால் கையிலிருந்த சேமிப்பெல்லாம் கரைந்து போய் வெறுங்கையுடன் உள்ள அப்பாவி பொதுமக்களிடம் இருந்து எஞ்சியிருக்கும் மானம் மரியாதையையும், பொருளையும் பறிக்கவே இந்த டாஸ்மாக் கடை திறப்பு என்று தெளிவாக தெரிகிறது.
அரசின் இந்த கொரோனா ஊழலுக்காக கழகத் தலைவர் அவர்கள் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் அதையெல்லாம் காது கொடுத்து கேட்கும் நிலையில் அரசு இல்லை.
இந்த நிலையில் மதுபான கடைகளை திறக்க ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசை கண்டித்தும், மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்காததை கண்டித்தும் மே 7-ஆம் தேதி ஒருநாள் மட்டும் கருப்பு சின்னம் அணிவது என்றும், அன்று காலை 10 மணிக்கு அவரவர் இல்லத்தில் முன்பு 5 பேருக்கு மிகாமல் 15 நிமிடங்கள் நின்று கொரோனாவை ஒழிப்பதில் தோல்வியடைந்து விட்டு அதிமுக அரசை கண்டிக்கிறோம் என முழக்கமிட்டு கலைவது என்றும், கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் நம் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து பேசி முடிவு எடுத்துள்ளனர்.
அதன்படி அனைத்து மாவட்ட இளைஞரணி தோழர்கள் கருப்பு சின்னம் அணிந்து தங்களின் வீட்டின் முன்பு 5 பேர் மிகாமல் சமூக இடைவெளியுடன் கொரோனாவை ஒழிப்பதில் தோல்வியடைந்து விட்டு அதிமுக அரசை கண்டிக்கிறோம் என முழக்கமிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் கொரோனா ஒழிப்பில் அதிமுக அரசு காட்டும் அலட்சியத்தை பொது மக்களிடம் எடுத்துக் கூறி இந்த போராட்டத்தில் ஆவர்களையும் பங்கெடுக்க செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.