Categories
உலக செய்திகள்

இந்தியாவுடன் நெருக்கமாகும் உஸ்பெகிஸ்தான்?

ஆப்கானிஸ்தான், சபாஹர் துறைமுகம் ஆகிய விவகாரங்களில் உஸ்பெகிஸ்தான் இந்தியாவுடன் நெருக்கமான ஒத்துழைப்பை மேற்கொண்டுவருகிறது.

உஸ்பெகிஸ்தானில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் அந்நாட்டின் ஜனநாயக சீர்திருத்தங்களை வலுப்படுத்தும். டிசம்பர் 22ஆம் தேதி, 150 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. ஐந்து முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. உஸ்பெகிஸ்தானின சுதந்திர ஜனநாயக கட்சி 43 தொகுதிகளை கைப்பற்றியது.

தேசிய மறுமலர்ச்சி கட்சி 35 இடங்களில் வெற்றிபெற்றன. புதிய தேர்தலின் மூலம் புதிய உஸ்பெகிஸ்தான் உருவாக்கப்படும் என அதிபர் ஷவ்காட் மிர்ஜியோயெவ் முழக்கமிட்டு நடைபெற்ற தேர்தலில், சூழலியல் கட்சி போட்டியிட்டது. தனது முதல் தேர்தலில் 11 இடங்களை அக்கட்சி கைப்பற்றியது. 50 நாடுகளின் 10 உலக அமைப்புகளைச் சேர்ந்த 800 சர்வதேச கண்காணிப்பாளர்கள் இந்த தேர்தலை மேற்பார்வையிட்டனர். இந்த கண்காணிப்பு பணியில் இந்தியாவைச் சேர்ந்த 11 பேர் பங்கேற்றனர்.

இந்தியாவுக்கான உஸ்பெகிஸ்தான் தூதர் பர்ரோத் அர்சீவ்

இந்தியாவின் ஜனநாயக முறைகளை கற்றுக்கொள்வோம் என இந்தியாவுக்கான உஸ்பெகிஸ்தான் தூதர் பர்ரோத் அர்சீவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர், “இந்தியா, உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கிடையே சாத்தியமான நாடாளுமன்ற ஒத்துழைப்பு காணப்படுகிறது. 2020ஆம் ஆண்டு, இரு நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையேயான சந்திப்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிறந்த நாடாளுமன்ற அனுபவங்களை இந்தியா பெற்றுள்ளது என்பது எங்களுக்கு தெரியும். அதிலிருந்து, நாங்கள் பயனடைய முயற்சிப்போம்” என்றார்.

2019ஆம் ஆண்டை போன்று, இந்தாண்டும் உஸ்பெகிஸ்தான் தனது வெளிநாட்டு பேச்சுவார்த்தையை இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் கூட்டமான ராய்சினா மாநாடு நடைபெறவுள்ளது. ஐந்தாவது மாநாட்டின் முக்கிய பேச்சாளராக உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துலாசிஸ் கமிலோவ் கலந்துகொள்ளவுள்ளார். அப்போது, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து வர்த்தகம், பாதுகாப்பு ஆகியவை குறித்து பேசவுள்ளார். உஸ்பெகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் இரு நாடுகளிக்கிடையேயான முதல் உயர்மட்ட பேச்சுவார்த்தை இதுவே ஆகும்.

மத்திய ஆசிய நாடுகளில் இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக உஸ்பெகிஸ்தான் திகழ்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என இரு நாடுகளிக்கிடையே இந்தாண்டு நவம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆப்கானிஸ்தான், சபாஹர் துறைமுகம் ஆகிய விவகாரங்களில் உஸ்பெகிஸ்தான் இந்தியாவுடன் நெருக்கமான ஒத்துழைப்பை மேற்கொண்டுவருகிறது.

2020ஆம் ஆண்டு ஹரியானாவில் நடைபெறவுள்ள சூரஜ்குந்த் மேளாவில் கைவினைப் பொருட்களையும், இக்காத் ஜவுளியையும் உஸ்பெகிஸ்தான் காட்சிப்படுத்தவுள்ளது. சூரஜ்குந்த் மேளாவின் தொடக்க விழாவில் ரிது பேரி தலைமையில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள இந்த மேளாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளவுள்ளனர். இதுவே உலகின் மிகப் பெரிய கைவினை பொருட்களின் கண்காட்சியாகும்.

உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 24 அமைப்புகள் இந்த மேளாவில் கலந்துகொண்டு தங்கள் நாட்டின் பொருட்களை விற்கவுள்ளது. உஸ்பெகிஸ்தான் நாட்டின் கலாசார நிகழ்வும் இந்த மேலாவில் நடைபெறவுள்ளது. மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானின் சுற்றுலாவில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது. 2017ஆம் ஆண்டு, 201 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இருநாட்டு வர்த்தகம் 2019ஆம் ஆண்டு 300 மில்லியன் டாலராக உயர்ந்தது.

Categories

Tech |