ஈராக்கில் காவல்துறையினர் வாகன அணிவகுப்பின் போது, ஐ.எஸ் தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியதில் 12 காவல்அதிகாரிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக் இராணுவமானது, அமெரிக்க படையின் உதவியைக்கொண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தியது. இதனையடுத்து, ஈராக் அரசு, ஐ.எஸ். தீவிரவாதிகள் மொத்தமாக தோற்றதாக கடந்த 2017-ம் வருடம் தெரிவித்தது. எனினும் சமீப நாட்களாக ஈராக்கில் மீண்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
இதில், தலைநகர் பாக்தாத்திலும் அதை சுற்றி அமைந்திருக்கும் நகர்களிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், ஈராக்கின் வட பகுதியில் இருக்கும் கிர்குக் மாகாணத்தில் அமைந்துள்ள தல் அல் ஸ்டீஹ் கிராமத்தில், காவல்துறையினரின் வாகன அணிவகுப்பின் போது, திடீரென்று ஜ.எஸ். தீவிரவாதிகள் மறைந்திருந்து காவல்துறையினரின் வாகனங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
காவல்துறையினர், சுதாரிப்பதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பிசென்றுவிட்டனர். இந்த பயங்கர தாக்குதலில், 12 காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், பலர் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.