பிரிட்டன் நாட்டில் உள்ள புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜ் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சாலையில் நடந்து சென்ற பொது மக்களை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தித் தாக்குதல் நடத்த ஆரம்பித்தார். யாரும் எதிர்பாராத விதத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில், அப்பாவி மக்கள் இருவர் கொல்லப்பட்டனர்.
படுகாயமடைந்த மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட நபரை சம்பவ இடத்திலேய சுட்டு வீழ்த்திய லண்டன் காவல் துறையினர், அந்நபர் உஸ்மான் கான் என்ற முன்னாள் குற்றவாளி எனக் கண்டறிந்தனர்.
கடந்த 2010ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி, கைது செய்யப்பட்ட உஸ்மான் கான் கடந்த வருடம் விடுதலை செய்யப்பட்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பிறந்து வளர்ந்த உஸ்மான் கான், அல்கொய்தா அமைப்பிடம் பயிற்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில் இந்தத் தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் தற்போது பொறுப்பேற்றுள்ளது. ஜிஹாதி அமைப்புகளுக்கு எதிராக செயல்படும் நாடுகளைக் குறிவைத்தே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரிட்டன் நாட்டில் பிரதமர் தேர்தலுக்கான பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில் இவ்விவகாரம் தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வலதுசாரியான கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளரான போரிஸ் ஜான்சனுக்கு, இந்த விவகாரம் மூலம் ஆதரவு பெருகும் என களச்சூழல் தெரிவிக்கிறது.