ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி இன்று நடைபெறும் தனது தொடக்க ஆட்டத்தில் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது .
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் (ஐ.எஸ்.எல்)கோவாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் ஒவ்வொரு அணியும் தலா இரண்டு முறை மற்ற அணியுடன் மோத வேண்டும். இதில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் .இதனிடையே இரண்டு முறை சாம்பியனான சென்னையின் எஃப்சி அணி இன்று நடைபெறும் தனது முதல் ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப் சி அணியுடன் மோதுகிறது. அதோடு சென்னையின் எஃப்சி அணியின் புதிய கேப்டனாக அனிருத் தபா தலைமையில் களமிறங்குகிறது.இப்போட்டி குறித்து பயிற்சியாளர் பாண்டோவிச் கூறும்போது,” ஒட்டு மொத்தமாக இல்லாமல் ஒவ்வொரு போட்டியும் கவனம் செலுத்துவோம்.
ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு டாப் -4 இடங்களில் நுழைவதே இலக்காகும். அதேசமயம் ஹைதராபாத் அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு இந்த லீக் சுற்றில் ஆடிய அனுபவம் உள்ளது .ஆனால் நாங்கள் எங்களுடைய பலம் மற்றும் எதிர் அணியின் பலவீனம் ஆகியவற்றை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்போம் .இது எங்களுக்கு நல்லதொரு போட்டியாக அமையும் என நம்புகிறோம். அணியில் அனுபவ வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். அதோடு புதிய கேப்டனான அனிருத் தபாவுக்கு அவர்கள் வழிகாட்டியாக இருப்பார்கள் “இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே கடந்த ஆண்டு 2 லீக் போட்டியிலும் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்த சென்னை அணி இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த சீசனில் வெற்றியுடன் தொடருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.