அயோத்தி வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக வழக்கை சுமுகமாக தீர்த்து வைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது.
இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது அறிக்கையை மத்தியஸ்தர் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதில் உள்ள தீர்வுகளை ஏற்று சன்னி வக்பு வாரியம் வழக்கைத் திரும்பப் பெறவுள்ளதாக தகவல் வெளியானது. அயோத்தி வழக்கைத் தொடர்ந்த மற்ற இஸ்லாமிய அமைப்புகள் இது குறித்து அதிருப்தி தெரிவித்தனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ஆம் தேதி ஓய்வு பெறவுள்ள நிலையில், அதற்கு முன் இவ்வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாட்டின் முக்கிய இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் அயோத்தி வழக்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அனைத்து இந்திய முஸ்லீம் மஜ்லிஸ்-இ-முசாவரத் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஜாமியத் உலமா-இ-ஹிந்த், ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டன.
நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அயோத்தி வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏற்படுத்தவிருக்கும் விளைவுகளை நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. நாட்டு மக்கள் அனைவரையும் சமூக அமைதிக்கு துணை நிற்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.