ஊரடங்கில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த இந்து பெண்ணின் சடலத்தை இஸ்லாமியர்களே தகனம் செய்துள்ளனர்
கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலில் இருக்கும் டீலா ஜமால் பூரா பகுதியில் வசித்து வந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்று உயிரிழந்தார்.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதன் காரணமாக உறவினர்கள் யாரும் அப்பெண்ணின் இருதி சடங்கிற்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து இதனை அறிந்த அக்கம் பக்கத்து இஸ்லாமியர்கள் முன்வந்து இறந்த பெண்ணின் உடலை சுமந்து சென்று தகனம் செய்துள்ளனர். இந்த இருதி சடங்கில் ஒருங்கிணைந்தவர்களுள் ஒருவரான சாஜித் கான் பேசுகையில் கல்லீரல் கோளாறு காரணமாக புதன்கிழமை இந்தப் பெண் உயிரிழந்தார். ஊரடங்கு உத்தரவினால் சொந்தங்கள் யாரும் வரமுடியாமல் போனதால் நாங்கள் அவரது உடலை சுமந்து வந்து சோலார் காட்டு பகுதியில் இருக்கும் சுடுகாட்டில் தகனம் செய்து விட்டோம்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண் பல நாட்களாக உடல் நலக் குறைவின் காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவருடைய கணவர் மோகன் தினக்கூலி. அவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர் எனக் கூறினார். இஸ்லாமியர்களின் இச்சம்பவம் பற்றிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் இஸ்லாமிய தொப்பி மற்றும் முக கவசம் அணிந்தவாறு சில ஆண்கள் இறந்த பெண்ணின் சடலத்தை தூக்கி செல்வது போன்ற காட்சிகள் அமைந்திருந்தது. மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக இருந்த அவர்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.