Categories
உலக செய்திகள்

கொரோனா பீதியில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம்: கவனிக்க ஆளின்றி பரிதாபமாக உயிரிழந்த மாற்றுத்திறனாளி சிறுவன்

சீனாவில் பரவிவரும் கொரோனா பீதியால் குடும்பம் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டதால், கவனிக்க ஆளின்றி மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை நொறுக்குவதாக இருந்தது.

சீனாவில் கொரோனா வைரஸ் நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 492 ஐ எட்டியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்து வரும் நிலையில். இந்த உயிர்க்கொல்லி நோயால் சீனாவில் மேலும் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய் பரவலின் மையமாக உள்ள ஹூபெய் மாகாணத்தில் இருக்கும் ஹூவாஜியாஹே நகரை சேர்ந்த யாங் செங் (வயது 16) என்ற சிறுவன் சிறுவயதிலேயே மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தான். இதனால் அவன் சக்கர நாற்காலியிலேயே இருந்து வந்தான். அந்த சிறுவனுக்கு தாய் இல்லாததால் அவனது தந்தையும், மூத்த சகோதரருமே கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் யாங் செங்கின் தந்தைக்கும், சகோதரருக்கும்  இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்ததால் அவர்கள் இருவரும் உள்ளூர் அதிகாரிகளால் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதனால் யாங் செங்கை கவனிக்க ஆளில்லாமல் போனது. தனது மகன் தனித்து விடப்பட்டிருப்பது குறித்தும், அவனது உடல்நிலை குறித்தும் யாங் செங்கின் தந்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, மகனை கவனித்துக்கொள்ளுமாறு உதவி கோரியிருந்தார். தனது மகனுக்கு உதவி கிடைக்கும் என்றும், அவன் நலமாக இருப்பான் என்றும் அவர் நம்பினார்.

இந்த நிலையில் ஒரு வார கால சிகிச்சையில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின் யாங் செங்கின் தந்தை மற்றும் சகோதரர் வீடு திரும்பினர். அங்கு அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. சிறுவன் யாங் செங் அவனது சக்கர நற்காலியில் பிணமாக கிடந்தான்.

கவனிக்க ஆள் இல்லாததால் தனிமையில் வாடிய சிறுவன் உணவு உள்ளிட்டவை கிடைக்காமல் பரிதாபமாக இறந்துள்ளான். இந்த ஒரு வார காலத்தில் சிறுவனுக்கு 2 முறை மட்டுமே உணவு வழங்கப்பட்டதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சீன கம்யூனிஸ்டு கட்சியின் உள்ளூர் தலைவர் மற்றும் ஹூவாஜியாஹே நகர மேயர் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |