பிரதமர் நரேந்திர மோடி தந்த ஊக்கத்தின்பேரில் அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் இஸ்ரேல் நாட்டுடன் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ள கவனம் செலுத்தினார். இதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக அசாம் மாநிலத்துக்கு ஏராளமான இஸ்ரேலிய தூதர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.
இதன் விளைவாக, விரைவில் அம்மாநிலத்தின் வர்த்தக தலைநகரான கவுகாத்தியில் மரியாதை நிமித்தமாக இஸ்ரேல் தூதரகம் அமைக்கப்படவுள்ளது. இதுகுறித்து டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அசாம் முதலமைச்சர் பேசுகையில், “விவசாயம், தண்ணீர் மேலாண்மை சார்ந்த தொழிநுட்பங்களாக இருந்தாலும் சரி சுற்றுலாத் துறையாக இருந்தாலும் சரி இஸ்ரேல் அவற்றில் சிறந்து விளங்குகிறது. ஆதலால் அவர்களுடன் பேசுமாறு பிரதமர் எங்களுக்கு அறிவுறுத்தினார். அதன்படி அவர்களிடம் நாங்கள் பேசினோம். அதன் விளைவாக, சமீபத்தில் இஸ்ரேல் நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டோம். மிக விரைவில் அசாம் மாநிலத்தில் மரியாதை நிமித்தமாக இஸ்ரேல் தூதரகம் ஒன்று அமையவுள்ளது” என்றார்.
ஏற்கனவே கவுகாத்தியில் வங்கதேசம், பூட்டான் என இரண்டு அண்டை நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ள நிலையில், அங்கு இஸ்ரேல் தூதரகம் அமைவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இஸ்ரேலுக்கு, டெல்லி, மும்பை, பெங்களூரு என மூன்று நகரங்களில் தூதரகம் உள்ளன. மரியாதை நிமித்தமாக அமைக்கப்படும் இந்த வகை தூதரகங்கள் இரு நாட்டுக்கும் இடையேயான பொருளாதார, அறிவியல், கலாசார உறவை மேம்படுத்தும் நோக்கம் கொண்டவை. இதுதவிர, தூதரகம் அமைப்பதால் நாட்டின் குடிமக்களைப் பாதுகாக்கவும் இது உதவுகிறது. அதேசமயம், சூழலுக்கேற்றார்போல இந்த வகை தூதரங்களின் செயல்பாடுகள் விரிவாக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அசாமில் நடைபெற்றுவரும் தொடர் போராட்டங்களால் அம்மாநிலத்தில் அமைதியற்ற சூழல் நிலவிவருகிறது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அசாமில் சுமார் 1 கோடியே 60 லட்சம் (34.22 சதவீதம்) இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். இதன்மூலம் ஜம்மு-காஷ்மீரைத் தொடர்ந்து அதிகளவில் இஸ்லாமியர்கள் வாழும் மாநிலமாக அசாம் திகழ்கிறது.
அண்டை மாநிலங்களான மிசோரம், மணிப்பூரில் வாழ்ந்துவரும் மிஸோ, குகி, பாய்டெய் ஆகிய பழங்குடியினர் தாங்கள் இஸ்ரேலைப் பூர்வீகமாகக் கொண்ட 10 அழிந்துபோன பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறுகின்றனர். கவுகாத்தியில் தூதரகம் அமைந்தால் இந்தப் பழங்குடியினருக்கு இஸ்ரேல் செவிசாய்க்கக்கூடும்.
சுமார் இரண்டு ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்ரேலில் வாழ்ந்துவந்த பிநெய் மென்ஷி (மென்ஷியின் புதல்வர்கள்) என்ற குலத்தை அஸ்சிரியன் அரசர் ஒருவர் விரட்டி அடித்ததாகவும் அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களே தற்கால மிசோரம், மணிப்பூர் பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும் இப்பழங்குடிகளின் வாழ்மொழி வரலாறு பேசுகிறது.
ராணுவம், வியூகம், தகவல்கள் பரிமாற்றம் என பல்வேறு துறைகளில் இந்தியா-இஸ்ரேல் இடையே நெருக்கமான உறவு நீடித்துவருகிறது. இஸ்ரேல் நாட்டிடமிருந்து அதிகளவில் ராணுவ ஆயுதங்கள் வாங்கும் நாடாக இந்தியா உள்ளது. இஸ்ரேல் போன்று ஒன்றிரண்டு நாடுகள் மட்டமின்றி பல்வேறு நாடுகளின் தூதரகங்களும் அசாமில் அமைய வேண்டும் என்பதே அம்மாநில முதலமைச்சரின் எண்ணமாக உள்ளது.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், “அனைத்து ஆசியன் நாடுகளின் தூதரகங்களும் கவுகாத்தியில் அமைக்கப்பட வேண்டும். இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் நாங்கள் உதவி கோரியுள்ளோம். எங்களுக்கு உதவுவதாக அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. கவுகாத்தியை ‘தெற்காசியாவின் வாயிலாக’ மாற்ற வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்” என விருப்பம் தெரிவித்துள்ளார்.