இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மற்றும் பாலஸ்தீனர்கள் இடையே நேற்று பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக கடும் மோதல் நிலவி வருகிறது. இதில் பாலஸ்தீனம், காசா முனை மற்றும் மேற்கு கரை என 2 பகுதிகளாக பிரிந்தது. இதன்பின் பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை திகழ்கிறது. இந்த காசா முனையை ஹமாஸ் இயக்கம் ஆட்சி அமைத்து வருகிறது. குறிப்பாக இஸ்ரேலை அழிப்பதே தங்களது நோக்கம் என ஹமாஸ் இயக்கத்தின் சாசனம் கூறுகிறது.
மேலும் காசாமுனை பகுதியிலிருந்து ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் நாட்டின் மீது பலமுறை ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனால் ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவமும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், காசா முனை பகுதியில் இஸ்ரேலிய படையினர் மற்றும் பாலஸ்தீனர்கள் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள டமாஸ்கஸ் நுழைவாயில் பகுதியில் பாலஸ்தீனர்கள் திரண்டனர். அந்த சமயம் அங்கிருந்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீதும் பேருந்தின் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர். இதனை தொடர்ந்து இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பயங்கரமான மோதல் வெடித்தது.
பின்னர் மோதலை கட்டுப்படுத்தும் வகையில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி பாலஸ்தீன போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இந்த மோதலில் ஈடுபட்ட 17 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 22 பேரை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதும் குறிப்பிட்டத்தக்கதாகும்.