கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 2020 இல் இருந்து சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்பொழுது மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் கடந்த மார்ச் மாதத்திலேயே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. ஆனால் உருமாறிய கொரோனா தொற்றான டெல்டா வகையினால் அத்திட்டம் தாமதமானது. இதனை அடுத்து மூன்றாவது தவணையான பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தும் பணியில் அரசு தீவிரமாக இறங்கியது.
இதனால் மக்கள் தொகையில் 50% பேருக்கு மூன்றாவது தவணையான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது. இதனை தொடர்ந்து தான் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக பயணிகள் பயணத்துக்கு முந்தைய ஆறு மாதங்களுக்குள் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் கடந்த 6 மாதங்களில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்திருக்க வேண்டும். குறிப்பாக விமானத்தில் ஏறுவதற்கு முன்னரும் இறங்கிய பின்னரும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.