நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வராமலும் நான் பொது சேவையை செய்வேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கு சமயத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் திரைப்பட தொழிலாளர்கள் சங்கம், நடன கலைஞர்கள் சங்கம், நடிகர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவற்றிற்கு பல கோடி நிதி வழங்கியுள்ளார். மேலும் அம்மா உணவகங்களில் இலவச உணவிற்கு பணம் கொடுத்துள்ளார். வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்ல உதவியுள்ளார். அத்துடன் அவர் நடத்தும் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளையும் படிக்க வைக்கிறார். இதைத்தொடர்ந்து நடிகர் லாரன்ஸ் அரசியலுக்கு வர முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியது .
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ” நான் அரசியலுக்கு வந்து பதவி பெற்று ஏழை மக்களுக்கு தொண்டு செய்வேன் என கூறி நேரத்தை வீணடிப்பதை விட, அமைதியாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூக சேவை செய்வது சிறந்தது என நம்புகிறேன். இதற்கு முன்பு நான் பதிவிட்ட வீடியோ என்னுடைய 12 வருட முயற்சி மற்றும் நம்பிக்கையின் சான்றாக இருக்கிறது. குழந்தைகளின் கனவுகள் நனவாகி இருப்பதையும் பார்க்கலாம். 200 குழந்தைகள் படிக்கிறார்கள். அரசியலுக்கு வராமல் இதை செய்வதும் சாத்தியம்தான், சேவையே கடவுள்!” என பதிவிட்டுள்ளார்.