வெங்காயத்தின் விலை சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விண்ணை முட்டியுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 180 முதல் 220 வரை விற்கப்பட்டுவருகிறது. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் வெங்காயம் வாங்காமல் சமையல் செய்து வருகின்றனர். ஆனாலும் சமையலில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக விலைக்கு வெங்காயம் விற்கப்படுவதை சமூக ஊடகங்களில் பலரும் மீம்ஸ் செய்து நக்கலடித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திராவிலுள்ள பெட்ரோல் பங்கில் வெங்காயத்தை வெல்ல குலுக்கல் முறையிலான போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ரூபாய் 200க்கு பெட்ரோல் வாங்குபவர்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் வெல்லும் போட்டிக்கான கூப்பனும் ரூபாய் 500க்கு பெட்ரோல் வாங்குபவர்களுக்கு இரண்டு கிலோ வெங்காயம் வெல்லும் போட்டிக்கான கூப்பன்களும் வழங்கப்படுகிறது.
ஆண்டுதோறும் டிசம்பர் 6ஆம் தேதி முதல் ஜனவரி 26ஆம் தேதி வரை இந்த பெட்ரோல் பங்கில் குலுக்கல் போட்டிகள் நடைபெறும் என்றும் இந்த முறை வெங்காய விலை உச்சத்தைத் தொட்டுள்ளதால் வெங்காயத்தையும் ஒரு பரிசுப் பொருளாக இணைத்துள்ளதாகவும் பெட்ரோல் பங்க் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.