அம்பத்தூரில் ஐ.டி. கம்பேனியில் வேலைக்குச் சேர்ந்த இளம்பெண், சேர்ந்த 2-வது நாளிலேயே மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் தனிதா (வயது 24). இவர் அம்பத்தூரில் இருக்கும் ஐயோபெக்ஸ் டெக்னாலஜி என்ற ஐ.டி. கம்பேனியில் நேற்று முன்தினம் புதிதாக மென்பொருள் பொறியாளராக பணியில் சேர்ந்துள்ளார். அதன்பின் நேற்று 2-வது நாளாக வேலைக்கு சென்ற தனிதா காலை 10 மணி முதல் மாலை வரை பணிபுரிந்து கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தனிதா திடீரென மாலை 6.45 மணியளவில் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் 8-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து போலீசாருக்கு அங்கிருந்து தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய போலீசார் தனிதா தற்கொலை செய்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலைக்கு சேர்ந்து இரண்டாவது நாளிலேயே இளம் பெண் ஐ.டி. நிறுவனத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனிதா தற்கொலை செய்த மர்மம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.