தேனி மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் பழங்குடியினருக்காக கட்டப்பட்டு வரும் வீடு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக புகார் அளித்துள்ளனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் உள்ள மஞ்சளாறு அணையின் மேற்கு பகுதியில் ராசிமலை நகர் என ஒரு மலைக்கிராமம் உள்ளது. அப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அங்கு வாழ்ந்து வந்த 26 குடும்பங்களுக்கு கடந்த 1999ஆம் ஆண்டு ஒரு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த வீடுகள் தற்போது பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த 2018 ஆம் ஆண்டு மனு அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குடிசை மாற்றுவாரியத்தின் கீழ் 11 லட்சம் மதிப்பில் 32 வீடுகள் காட்டும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் 2 வருடங்கள் ஆகியும் வீடு கட்டும் பணிகள் முடிவடையாமல் குறைந்த பணியாளர்களை கொண்டு ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றது.
இதனைத்தொடர்ந்து வீடு இல்லாத பழங்குடியின மக்கள் ஓலைகள் மற்றும் தார்பாய் மூலம் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு வனவிலங்குகளின் அச்சுறுத்தலினாலும், போதிய தெரு விளக்குகள் இல்லாததினாலும் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஓரிரு மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றர். இதனையடுத்து பருவமழை தொடங்குவதற்குள் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பழங்குடியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.