நோய்த்தொற்றினால் இறந்த மருத்துவர்கள் உடலை தகனம் செய்யவிடாமல் தடுப்பது மனிதாபிமானமற்றது என அமைச்சர் வேலுமணி வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டரில், நேற்று இரவு சென்னை அண்ணாநகரில் மருத்துவர் ஒருவரது பிரேதத்தை அடக்கம் செய்ய சென்ற போது அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேரிடர் சமயத்தில் நமக்காக பணியாற்றும் போது, நம்மை பாதுகாக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், உள்ளாட்சி ஊழியர்கள், மின் ஊழியர்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து செயலாற்றும் அதிகாரிகள், செய்தியாளர்கள் என நமக்கு அத்தியாவசிய சேவைகள் வழங்கும் இவர்கள் தான் நமது மனித கடவுளர்கள். இவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவது, நோய்த்தொற்றினால் இறக்க நேரிடும் போது மனிதாபிமானமின்றி தகனம் செய்யவிடாமல் இடையூறு விளைவிப்பது, மாநகராட்சி ஊழியர்களை தாக்குவது என்று சிலர் நடந்துகொள்வது வேதனையளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
அத்தகையோர் மீது நகராட்சி நிர்வாகங்கள் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என எச்சரித்துள்ள அவர், கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் சார்ந்த ஊடக நிர்வாகங்கள், தங்களுடைய பணியிடங்கள், பிற பணியாளர்களின் சுகாதார பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி் செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எந்த ஒரு பாகுபாடும் இன்றி மாநகராட்சி நிர்வாகம், மக்கள் பணியாற்றும் ஊடகங்களுக்கு தேவையான சுகாதார உதவிகளை செய்ய தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.