Categories
மாநில செய்திகள்

கொரோனா நோயை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது – முதல்வர் பழனிசாமி வருத்தம்!

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர், ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மலர்கள் வீணாவதை தடுக்க வாசனை திரவிய தொழிற்சாலைகளுடன் பேசி தீர்வு காணப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் சிவப்பு பகுதிகளில் தற்போதைய ஊரடங்கு நடைமுறை தொடர்ந்து இருக்கும். 15 பேருக்கு அதிகமாக கொரோனா பாதித்துள்ள மாவட்டங்கள் சிவப்பு பகுதிக்குள் வரும் என கூறிய அவர், தமிழகத்தில் குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கி வருகிறோம்.

உணவுப் பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அரசின் நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மத்திய அரசிடம் தேவையான நிதியை கேட்டுள்ளோம். எதிர்கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசிடம் தமிழகத்திற்கான நிதியை கேட்கவில்லை என கூறியுள்ள அவர், அரசின் சிறப்பான பணிகளை எதிர்கட்சிகள் திட்டமிட்டு தவறாக விமர்சனம் செய்கின்றன என புகார் அளித்துள்ளார்.

புயல், சுனாமி வந்தாலும் மு.க.ஸ்டாலின் குறை சொல்லிக்கொண்டே தான் இருப்பார், நோயை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது என வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் ரம்ஜான் நோன்பு காலம் தொடங்க உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து அரசு ஆலோசிக்க உள்ளது. தமிழக தலைமை காஜியுடன், தலைமை செயலாளர் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார் என முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |