காங்கிரஸ் கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என அடுத்த வாரம் செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட்டு விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகினார். இதற்காக அவர் கடந்த மே 25-ஆம் தேதி ராஜினாமா கடிதத்தை அளித்து விட்ட நிலையில் கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்ற குழப்பம் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்ற நிலையில் இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக அடுத்த வாரம் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட்டு அது தொடர்பாக விவாதிக்கப்படும் என மூத்த தலைவர் கே.சி வேணுகோபால் கூறியுள்ளார்.
அதற்கு முன்னதாக கட்சிப் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநில கமிட்டி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே ராகுல் தங்கை பிரியங்கா காந்தியை கட்சித் தலைவராக்க வேண்டும் என பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே சசி தரூரும் பிரியங்காவை நியமிக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.