சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டிலிருந்து அடிக்கடி நோயாளிகள் தப்பி செல்வதற்கு பாதுகாப்பு குளறுபடி காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு போதிய பாதுகாப்பு இல்லாததன் காரணமாக நோயாளிகள் சிலர் அடிக்கடி தப்பிச் சென்று விடுகின்றனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் அங்கும் இங்கும் தேடியலைந்து மீட்டு வந்து மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் நேற்று முன்தினம் இரவு வார்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் நைசாக தப்பி சென்று விட்டார். இதனால் மருத்துவமனையில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் அந்த மூதாட்டியை அரிசிபாளையம், 4 ரோடு உள்ளிட்ட பல இடங்களில் தேடி வந்தனர்.
இதற்கிடையே லீ பஜாரிலுள்ள ஒரு கடையின் முன்பு படுத்து கிடந்த அந்த மூதாட்டியை காவல் துறையினர் 3 மணி நேரத்தில் மீட்டனர். அதனைத்தொடர்ந்து அவரை மருத்துவ பணியாளர்கள் உதவியுடன் மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா மிகவும் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் கொரோனா வார்டிலிருந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் அடிக்கடி தப்பி செல்வதால், அவர்கள் மூலமாக மேலும் பலருக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மருத்துவமனையில் பாதுகாப்பு குளறுபடி தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. எனவே மருத்துவமனையிலிருந்து கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் தப்பி செல்லாத வகையில் பாதுகாப்பை அதிகரிக்க மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.