சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கூறுகையில், “உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் சாதி, மத எந்த அடையாளத்துக்குள்ளும் அடங்க மாட்டார். சமணர்கள் தங்களுக்கான அடையாளம் என்று திருவள்ளுவரை உரிமை கோருகின்றனர். பௌத்தர்கள் பெளத்தத்தின் அடையாளமாக திருக்குறளை எழுதியிருக்கிறார் என்று உரிமை கோருகிறார்கள். சமணர்களும், பௌத்தர்களும் திருவள்ளுவரை உரிமை கோருவதில் ஒரு பொருள் இருக்கிறது. அவை இரண்டிலும் சாதி, மதம், ஏற்றத்தாழ்வு கிடையாது. சமத்துவம் ஒன்றே இருக்கிறது.
பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை என்று ஓங்கி உரைத்து முழுங்கிய திருவள்ளுவரை இந்துத்துவ அடையாளத்திற்குள் அடக்குவது, சுருக்கிப் பார்ப்பது. அவரை கொச்சைப்படுத்துவது ஆகும். சமத்துவத்திற்கு எதிரான இந்துத்துவ அடையாளங்களை திருவள்ளுவர் மீது திணிப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல, திருவள்ளுவரின் கருத்துகளுக்கும் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் இந்துத்துவக்கும் எதிரானவை” என தெரிவித்தார்.
”பிள்ளையார்பட்டியில் வள்ளுவர் சிலையை சேதப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களைக் கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க வேண்டும். அம்பேத்கர், பெரியார் சிலைகளை அவமதித்த கயவர்கள், இப்போது வள்ளுவரையும் அவமதிக்கிறார்கள் என்பது தமிழன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கக் கேடாக இருக்கிறது.
உலகத்தில் பல நாடுகளில் வள்ளுவரை போற்றுகிறார்கள். வள்ளுவர் சிலை திறக்கப்படுகின்றன. உலகத்தில் எல்லா மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டவை திருவள்ளுவரின் திருக்குறள். உலக நாடுகள் போற்றும் மாமனிதரை தமிழ்நாடு அவமதிப்பது என்பது தலைகுனிய வைக்கின்ற செயலாகும். வள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேடிக்கை பார்க்கக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது” என்றார்.