அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பாஜக தலைமைதான் முடிவு எடுக்கும் என்று பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அதிமுக சார்பில் 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுவும் தாக்கல் செய்தனர். இத்தேர்தலை சந்திக்க அதிமுகவினர் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பாமக மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் ஆதரவு கேட்டனர். ஆனால் பாஜகவிடம் ஆதரவு கேட்கவில்லை என்பதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் நேற்று சென்னை வந்த பிரதமர் மோடியிடம் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து நேற்று சென்னை அருகேயுள்ள திருமழிசை பகுதியில் பேட்டியளித்த துணை முதல்வர் ஓபிஎஸ், பிரதமர் மோடியுடனான சந்திப்பில் அரசியல் பேசப்படவே இல்லை. பாஜக – அதிமுக இடையேயான கூட்டணி உறவில் எந்த பிளவும் இல்லை. பாஜகவினர் கண்டிப்பாக தேர்தல் பரப்புரைக்கு வருவார்கள். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவிடம் பேசியுள்ளோம் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பாஜக தலைமைதான் முடிவு எடுக்கும் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.