ராமநாதபுரம் மாவட்டம் சென்னை-பெருநாழி இடையே அரசு விரைவு பேருந்து இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் கடலாடி பகுதிகளில் சுமார் 60 கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பலரும் சென்னை, கோவை போன்ற பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வெளியூரில் வேலை பார்பவர்கள் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து செல்ல நேரடி பஸ் வசதி இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து கமுதியில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து சில வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே அதனை மீண்டும் இயக்க வேண்டும் என்றும், சாயல்குடி பகுதி வழியாக செல்லும் அரசு விரைவு பேருந்து பெருநாழி வழியாகவும் இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையை ஏற்று தெற்கு மாவட்ட திமுக கவுன்சிலர் சசிகுமார் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். அப்போது திமுக மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் பெருநாழி போஸ் உடனிருந்துள்ளார்.