கொரோனா என்கிற அரிய வகை வைரஸ் காய்ச்சல், சீனா முழுவதும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வகை வைரஸ் காய்ச்சலினால் சீனாவில் மட்டும் தற்போதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனர்கள் மட்டுமின்றி, அந்நாட்டில் தங்கியிருக்கும் பிற நாட்டவருக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. இதனால் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் இருந்துவருகின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை சாலையில் அமைந்துள்ள ‘ஹோட்டல் நியூ பிரசிடெண்ட்’ என்ற தனியார் சைவ உணவகத்தில், சின்ன வெங்காயத்தால் செய்யப்பட்ட ஊத்தாப்பம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் தாக்காது என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த உணவகத்தின் உரிமையாளர் இதுதொடர்பாகக் கூறுகையில், சின்ன வெங்காயம் சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி கூடும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸ் பாதிப்பு வராது என்பதால், விழிப்புணர்விற்காக விளம்பரப் பலகை வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் நோய்க்கு உலக சுகாதார நிறுவனம் முதல், சர்வதேச மருத்துவர்கள் வரை சரியான மருந்து கிடைக்காமல் தவித்துவரும் நிலையில், காரைக்குடி ஹோட்டல்காரரின் இந்த வியாபார யுக்தி பொதுமக்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துள்ளது.