இத்தாலியின் வாடிகன் நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் போப் பிரான்சிஸ் அவர்களும் நேரில் சந்திப்பு.
இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகரில் இந்தியா உட்பட 20 வளரும் நாடுகள் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கின்றன. தற்போது நடக்கவுள்ள ஜி-20 மாநாடு 16 ஆவது ஆண்டாக இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, இந்திய பிரதமர் உட்பட ஜி-20 மாநாட்டின் அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
அதிலும் குறிப்பாக கொரோனா பரவலுக்கு பின் ஏற்பட்ட பொருளாதார மீட்பு நடவடிக்கைகள், பருவ நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்த ஜி-20 மாநாடு கவனம் செலுத்தும் என தெரிய வந்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று தனி விமானம் மூலம் பிரதமர் மோடி இத்தாலி சென்றார்.
மேலும், இன்று இத்தாலியின் வாடிகன் நகருக்கு சென்ற பிரதமர் மோடி போப் பிரான்சிஸ் அவர்களை நேரில் சந்தித்தார். அப்போது, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரும் போப் பிரான்சிஸ் உடன் இருந்தனர்.