ஒற்றை தலைமை யுத்தத்தின் விளைவாக இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக இருக்கிறது. அதிமுக இந்த யுத்தத்தில் அரசியல் ரீதியாக, சட்டரீதியாக எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். ஆனால் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு குறித்த உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஓபிஎஸ்சின் மேல்முறையீடு வழக்கு கட்சி தலைமை பொறுப்புக்கு உரிமை கோரி இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனு ஆகியவற்றின் மீது நீதிமன்றமும், ஆணையமும் என்ன முடிவு எடுக்கப் போகின்றது என்பதை பொறுத்துதான் கட்சியின் தலைமை பொறுப்பு யாருக்கு என்பது 100% உறுதியாகும். இருப்பினும் கட்சியின் 90% மேற்பட்ட போது குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகளின் ஆதரவு தமக்கே இருப்பதால் இன்னும் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்துவது மட்டும் தான் மிச்சம். அதையும் வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டால் கட்சியில் ஜெயலலிதா வகித்து வந்த உயர் பொறுப்பான பொதுச் செயலாளர் பதவிக்கு வந்துவிடலாம் என்று இபிஎஸ் கணக்கு போட்டுள்ளார்.
இந்நிலையில் இபிஎஸ்க்கு அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதிமுகவை மீண்டும் ஒன்றிணைப்பது குறித்து ஓபிஎஸ் விரைவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இபிஎஸ் தரப்பு கொஞ்சம் டென்ஷன் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எனக்கா, டென்ஷனா என்று கேட்கும் படியாக தமது சொந்த ஊரான எடப்பாடியில் செய்தியாளருக்கு இன்று இபிஎஸ் பேட்டியளித்துள்ளார். அப்போது 33 ஆண்டுகால தமிழகத்தில் ஆட்சி புரிந்த கட்சி பிரதான எதிர்க்கட்சி என பெருமைக்குரியது அதிமுக. சிலர் வேண்டுமென்று திட்டமிட்டு கட்சியை உடைக்கவும், முடக்கவும் பார்க்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. அதிமுகவிற்கு எதிராக செயல்படுத்துபவர்களை இனி கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஒரு கட்சி விவகாரத்தில் மற்றொரு கட்சி தலையிட முடியாது என்று திட்டவட்டமாக இபிஎஸ் கூறியுள்ளார். அதிமுகவிற்கு எதிராக செயல்படுபவர்களை இனி கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று ஓபிஎஸ்- ஸை தான் அவர் மறைமுகமாக கூறியுள்ளதாகவும், ஒரு கட்சி விவகாரத்தில் மற்றொரு கட்சி தலையிட முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளது பாஜகவை தான் எனவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மேலும் பாஜக மேல் இடத்தை தலையிட வைத்து எப்படியாவது அதிமுகவை ஒன்றிணைத்து விடலாம் என்று எண்ணியிருக்கும்போது இபிஎஸ் இப்படி கறாராக கூறியுள்ளதால் ஓபிஎஸ் அண்ட் கோ அப்செட்டில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.