ஒரே நேரத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்து நகர் பகுதியில் தடையை மீறி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டு அவர்களை கையும், களவுமாக பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சுந்தர நயினார் மற்றும் மாரி சங்கர் என்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல்துறையினர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததோடு அவர்களை கைது செய்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்போது கோவில்பட்டி பகுதியில் இருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டு அவர்களை மடக்கி பிடித்து விட்டனர். அதன் பிறகு அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டைப் பகுதியில் வசிக்கும் ராஜ்குமார் மற்றும் ரமேஸ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு அவர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.