ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வில்வமரத்துபட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற லோடு வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் 3 டன் ரேஷன் அரிசியை 50 சாக்கு மூட்டைகளில் கடத்திச் சென்றதை கண்டு பிடித்துள்ளனர்.
அதன் பிறகு காவல்துறையினர் அந்த வேன் டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காமராஜபுரம் பகுதியில் வசிக்கும் ராமசெல்வம் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லோடு வேன் மற்றும் 3 டன் ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரேஷன் அரிசியை கடத்திய குற்றத்திற்காக ராமசெல்வத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.