மாணவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வசவப்பபுரம் பசும்பொன் பகுதியில் கூலித் தொழிலாளியான சுடலைமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாலைராஜா என்ற மகனும், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் கவிதா உட்பட மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கவிதா மட்டும் தனியாக செல்போன் பார்த்துக்கொண்டு இருக்கும்போது அவரின் அண்ணனான மாலை ராஜா என்பவர் சென்றுள்ளார். இதனையடுத்து மாலை ராஜாவுக்கும், கவிதாவுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதால் கோபமடைந்த மாலை ராஜா அங்கிருந்த அரிவாளை எடுத்து கவிதாவை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இதில் கவிதா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து ரத்த வெள்ளத்தில் கிடந்த கவிதாவை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு கவிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று கவிதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் கவிதா எந்த நேரம் பார்த்தாலும் செல்போனில் முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களை பார்ப்பதும், கேம் விளையாடுவதுமாகவே இருந்துள்ளார். இதனால் மாலை ராஜா தனது தங்கையிடம் இவ்வாறு அடிக்கடி செல்போனை பார்க்கக் கூடாது என்று திட்டியுள்ளார். ஆனால் அதையெல்லாம் ஏற்காமல் கவிதா மீண்டும் செல்போனை பார்த்துக்கொண்டிருந்த போது மாலை ராஜா சென்று கவிதாவிடம் நான் பலமுறை சொல்லியும் நீ கேட்காமல் மீண்டும் செல்போன் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று திட்டியுள்ளார். இதனால் அண்ணன், தங்கை இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கோபமடைந்த அண்ணன் தனது தங்கை என்று கூட பாராமல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார் என்று காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தப்பிச்சென்ற மாலைராஜா வலைவீசி தேடி வருகின்றனர்.