சிமெண்ட் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள எலந்தங்குழி பகுதியின் கோவிந்தசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தசாமி சாலை வழியாக செந்துறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக கோவிந்தசாமியின் மீது மோதி விட்டு அங்கு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் மற்றும் கோவிந்தசாமியின் உறவினர்கள் இணைந்து இந்த விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அந்த சிமெண்ட் லாரியை, டிரைவரையும், பிடித்து விட்டனர். அதன்பிறகு கோவிந்தசாமி உறவினர்கள் அந்த லாரி டிரைவரிடம் விபத்தை ஏற்படுத்தியதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் அந்த டிரைவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் கோவிந்தசாமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து விபத்தில் உயிரிழந்த அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திடீரென அப்பகுதியில் இருந்த மரக்கட்டைகளை எடுத்து போக்குவரத்து சாலையில் குறுக்கும் நெடுக்குமாக போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் இந்த விபத்தில் உயிரிழந்த கோவிந்தசாமியின் குடும்பத்தினருக்கு சட்டப்படி நடவடிக்கை எடுத்து இழப்பீடு வாங்கி தருவதாக உறுதி அளித்ததால் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனையடுத்து காவல்துறையினர் கோவிந்தசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி டிரைவரான தனசேகரனை கைது செய்ததோடு அந்த லாரியும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.