கூலித் தொழிலாளியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள நெடுங்குளம் பகுதியில் கூலி தொழிலாளியான ஆறுமுகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகம் தனது வீட்டின் முன்பகுதியில் உள்ள பொது சாலையில் யாரும் நடக்கக்கூடாது என்று கூறி அந்த சாலையை அடைத்து உள்ளார். அப்போது அவ்வழியில் செல்வதற்கு ஆயுதப்படை போலீஸ்காரரின் தாயார் அங்கு சென்றுள்ளார். அப்போது ஆறுமுகம் இந்த சாலையில் நடந்தால் உன்னை கொன்று விடுவேன் என்று அவரை மிரட்டியுள்ளார். இதனால் அவர் கொடுத்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக ஆறுமுகத்தை கைது செய்து அம்பாசமுத்திரத்தில் உள்ள கிளை சிறையில் அடைத்து விட்டனர்.
இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் கிருஷ்ணராஜ் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் ஆகிய இருவரும் இணைந்து மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் என்பவரிடம் ஆறுமுகம் ஜாமினில் வெளியே வந்தால் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார் என்று தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் பெயரில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் பரிந்துரை செய்துள்ளனர். அந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ், உடனடியாக ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் நகலை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் அதனை அம்பாசமுத்திரம் சிறை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் ஆறுமுகத்தை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்து விட்டனர்.