வேலூர் மாவட்டத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, இன்று அவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலர்கள், புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது பேசிய மயில்வாகணன், ராணிப்பேட்டையில் குற்றங்களைக் குறைக்க பொதுமக்களும் இளைஞர்களும் காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவித்தார்.
மேலும், ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார். முன்னதாக, வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ள மற்றொரு மாவட்டமான திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.