திமுக தற்போது உட்கட்சி தேர்தலை நடத்தி வருகிறது. இதில் கீழ் மட்ட உறுப்பினர்கள் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 71 மாவட்ட செயலாளர்களில் 7 பேர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளனர். அமைப்பு ரீதியாக 5 ஆக இருந்த கோவை மாவட்டம் தற்போது மூன்றாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வடக்கில் தொண்டாமுத்தூர் ரவியும், தெற்கில் தளபதி முருகேசனும், மாநகர் மாவட்டத்திற்கு நா. கார்த்திக்கும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
கடந்த 2014-ஆம் ஆண்டு தேமுதிக கட்சியில் இருந்து தளபதி முருகேசன் திமுகவில் இணைந்தார். இவர் கட்சியில் சேர்ந்தவுடன் பேரூராட்சி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததால் தேமுதிக கட்சியில் இருந்து வந்தவர்கள் ஒதுக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது தளபதி முருகேசனுக்கு பதவி வழங்கியிருப்பது திமுக கட்சியில் பல வருடங்களாக இருப்பவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவியை கொடுக்காமல் 8 வருடங்களுக்கு முன்பு சேர்ந்தவருக்கு எப்படி பதவி கொடுக்கலாம் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் தெற்கு மாவட்ட செயலாளருடன் திமுகவினர் எப்படி ஒருங்கிணைத்து போவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக அந்த விவகாரத்தில் தலையிட்டு பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என திமுக உடன் பிறப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.