அதிபர் டிரம்பின் மகளான இவாங்கா டிரம்ப் ஊரடங்கை மீறி குடும்பத்தினருடன் நியூஜெர்சிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்
கொரோனா தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர தேவை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பது உத்தரவு. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மகளான இவாங்கா வெள்ளை மாளிகையில் ஜனாதிபதிக்கு மூத்த ஆலோசகராக இருக்கிறார். இவரது கணவரும் ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்து வருகிறார்.அமெரிக்காவில் கொரோனா காட்டுத் தீயாய் பரவ தொடங்கியதும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மார்ச் இறுதியில் வீடுகளில் தங்கி இருக்கக் கூடிய சூழல் ஏற்பட்டிருப்பது அதிர்ஷ்டம்தான்.
தயவு செய்து அனைவரும் வீட்டில் இருங்கள் என்று இவாங்கா டிரம்ப் வீடியோ ஒன்றை வெளியிட்டார். சமூக இடைவெளியை பின்பற்ற அனைவரும் வீட்டில் இருக்குமாறு கேட்டுக் கொண்டதோடு தங்களை தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார். இது நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் இருக்க ஊக்கம் அளிப்பதாக இருந்தது. ஆனால் அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி இவாங்கா டிரம்ப் அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் நியூஜெர்சி மாகாணத்திற்கு சொகுசு பயணம் மேற்கொண்டார். இதுகுறித்த தகவல் முதலில் நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளிவந்து பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
இதனைத் தொடர்ந்து இவாங்காவின் கணவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வெள்ளை மாளிகைக்கு திரும்பிவிட்டார். ஆனால் இவாங்கா டிரம்ப் நியூஜெர்சியில் இருந்து கொண்டு, வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளித்துக்கொண்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இதுகுறித்து வெள்ளை மாளிகை கூறுகையில் “இவாங்கா டிரம்ப் வர்த்தகம் தொடர்பான பயணத்தை மேற்கொள்ளவில்லை. அவர் தனிப்பட்ட முறையில் குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க முடிவு செய்துள்ளார்” என கூறியுள்ளது. இதனிடையே நியூஜெர்ஸியிலும் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.