நடிகர் மோகன் எஸ்.பி பாலசுப்ரமணியம் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று ஒரு ரசிகனாக பிரார்த்தனை செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் குறித்து நடிகர் மோகன் கூறியதாவது ” திரையுலகிற்கு வரும் முன்பிருந்தே எஸ்பிபி அவர்களின் ரசிகன் நான். பெங்களூரில் இருந்த காலகட்டங்களில் அவரின் குரலும், பாடலும் என்னை மிகவும் ஈர்த்தது. அவருடைய பாடல்களை கேட்டு தான் வளர்ந்தேன். கல்லூரி வாழ்க்கையில், அவருடைய எத்தனையோ பாடல்கள் என் கல்லூரி வாழ்க்கையில் பலவற்றில் இரண்டறக் கலந்திருந்தது.
அப்பொழுதெல்லாம் நான் சினிமாவுக்கு வருவேன் என்றோ அல்லது நடிகர் ஆவேன் என்றோ நினைத்ததில்லை.ஆனால் எப்பொழுதுமே, எஸ்பிபியின் பாடல்கள் எனக்கு துணையாகவும், பொழுதுபோக்காகவும், உத்வேகம் அளிப்பதாகவும் இருந்தது. தெலுங்கில் எனது முதல் படமான ‘தூர்ப்பு வெல்லே ரயிலு’ என்ற படத்திற்கு எஸ்பிபி சார்தான் இசையமைப்பாளர். முள்ளபுடி வெங்கட்ரமணா திரைக்கதையில், பாப்பு இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு அனைத்து பாடல்களையும் எஸ்பிபி சார் பாடியிருந்தார்.
தமிழில் மகேந்திரன் இயக்கத்தில்’ நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்தில் நடித்தேன். அப்படத்தில் வரும் ‘ பருவமே புதிய பாடல் பாடு…’ என்ற பாடல் இன்றுவரை எல்லோருக்கும் பிடித்த பாடல். இப்படி நான் திரைத்துறைக்கு வருவேன் என்றோ அல்லது எனக்கு பிடித்த எஸ்பிபியின் பாடலுக்கு வாயசைப்பேன் என்றோ நினைத்துக் கூட பார்க்கவில்லை. தொழில் முறையில் இப்படியான இணைப்பு வந்திருந்தாலும் நான் எப்பொழுதுமே எஸ்பிபியின் தீவிர ரசிகன். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
என் மனமும், சிந்தனையும் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறது. அவரின் இனிமையான குரலில் அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் சாகாவரம் பெற்றவை. பாடல்கள் மட்டுமல்ல அவரும் அத்தகைய பண்பான மனிதர் தான். எஸ்பிபி பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டும் என அவரை இதயத்தில் வைத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். அன்புள்ளம் கொண்ட எஸ்பிபி பூரண நலம் பெற, நானும் ரசிகனாக பிரார்த்தனை செய்கிறேன்” என நடிகர் மோகன் கூறியுள்ளார்.