உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இடத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து ராமர் கோவிலை கட்ட மத்திய அரசு சார்பில் அறக்கட்டளை ஒன்றும் அமைக்கப்பட்டது. மேலும் ராமர் கோவில் கட்டும் பணிகளை உத்திரப்பிரதேச பாஜக அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி ராமர் கோவிலின் பூமி பூஜையும் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் திரு.நரேந்திர மோடி மூத்த மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் மட்டும் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் அயோத்தியில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி பாகிஸ்தானின் ISS உளவு அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்பான ரா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதற்காக லஷ்கர்-இ- தொய்பா, ஜெய்ஷ் முகமது அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஐந்து குழுக்களை அனுப்பி நாட்டின் பல இடங்களிலும் தாக்குதல் நடத்தி உள்நாட்டுப் குழுக்களால் நடைபெற்ற தாக்குதல் போல தோற்றத்தை ஏற்படுத்த ISS திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உளவுத்துறையின் எச்சரிக்கையைத் அடுத்து டெல்லி, அயோத்தி, காஷ்மீர், ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.