உத்தரபிரதேசத்தில் ஜேசிபி வாகனத்தின் மீது பஸ் மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து நேற்று 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் ஒன்று தலைநகர் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. உத்திரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சச்சிண்டி என்ற சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த ஜேசிபி வாகனத்தின் மீது பயங்கர வேகத்தில் மோதியதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும் 5 பேர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி அவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.