தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஜெ. ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு உடல் நலக் குறைவின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 75 நாட்களாக சிகிச்சையில் இருந்தார். அதன்பிறகு 75 நாட்களாக சிகிச்சையில் இருந்தும் ஜெயலலிதா மரணம் அடைந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் கடந்த 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிட்டி நியமிக்கப்பட்டது.
இந்த குழு 4 1/2 வருடங்களுக்கு பிறகு தங்களுடைய விசாரணை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது. இந்த விசாரணை அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ மற்றும் இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பலரும் பரிந்துரைத்தும் செய்யப்படாதது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதோடு ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, டாக்டர் கே.எஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கமிட்டி பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ,மர்மம் இருப்பதாக ஆறுமுகசாமி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.கே. பாலாஜி எனபவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் ஜெயலலிதா மரண வழக்கில் முக்கிய அதிகாரிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு சம்பந்தம் இருப்பதால் விசாரணையை தமிழக அரசு நடத்தாமல் சிபிஐ-க்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது சிபிஐ மற்றும் தமிழக அரசுக்கு முறையாக மனு கொடுக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் தமிழக அரசு மற்றும் சிபிஐ-க்கு மனு கொடுக்காமல் நேரடியாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.