தமிழகத்தில் ஆளுங்கட்சியாக திமுக இருக்கிறது. இந்த கட்சியில் அந்தியூர் செல்வராஜ், பொன்முடி, ஆ.ராசா, பெரியசாமி மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் துணை பொதுச் செயலாளராக இருக்கின்றனர். இதில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதனால் தற்போது சுப்புலட்சுமி ஜெகதீசன் இடத்திற்கு யார் வரப்போகிறார் என்று கேள்வி தான் திமுகவில் எழுந்துள்ளது. அதாவது மொத்தமுள்ள 5 பொதுச் செயலாளர்களில் ஒருவர் கண்டிப்பாக பெண் தான் இருக்க வேண்டும். இதன் காரணமாகத்தான் துணைப் பொதுச்செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு திமுக உடன் பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த பதவிக்கு தெற்கிலிருந்து ஒருவரை அல்லது கொங்கு மண்டலத்தில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதுதான் தற்போது பலரது கோரிக்கையாகவும் இருக்கிறது. இது தொடர்பாக 5 பெயர்களும் திமுக மேல் இடத்திற்கு போனதாக கூறப்படுகிறது. இந்த பெயர்கள் தற்போது பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால்தற்போது திமுக கட்சியின் மகளிரணி செயலாளரும், எம்பியுமான கனிமொழிதான் துணை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட போகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
சமீபத்தில் கூட ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் தலைவராக கனிமொழி எம்பியை மத்திய அரசு நியமித்தது. இதன் காரணமாகத்தான் கனிமொழி எம்பிக்கு துணை பொதுச்செயலாளர் பதவிவழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி திமுகவுக்கு பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பதில்லை என்று கூறப்படுகிறது. தற்போது கூட அமைச்சரின் பேச்சால் இலவச பேருந்துகளை பெண்கள் புறக்கணித்து வருகின்றனர். இதனால் பெண்கள் மத்தியில் திமுக என்றாலே ஒரு விதமான அதிருப்தி நிலவுகிறது.
இப்படிப்பட்ட பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாகத்தான் கனிமொழி எம்பியை துணை பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் என திமுக மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கட்சியில் கனிமொழி எம்பியை ஒதுக்கி வைத்திருப்பதாக ஒரு பேச்சு நிலவும் நிலையில், பொதுச் செயலாளர் பதவியை கனிமொழிக்கு கொடுத்து அந்த வதந்திக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவும் திமுக முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு 4 நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.