‘ஜகமே தந்திரம்’ டீசரில் நடிகர் தனுஷின் பெயரை குறிப்பிடாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது . இந்த படத்தை ஓடிடியில் வெளியிட முயற்சிகள் நடந்தபோது நடிகர் தனுஷ் ‘ஜகமே தந்திரம் தியேட்டர்களில் வெளியாகும் என உங்களைப் போல நானும் நம்புகிறேன்’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் . நேற்று ஜகமே தந்திரம் படத்தின் டீசர் வெளியானது . இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர் .
இந்நிலையில் அந்த டீசரில் நடிகர் தனுஷின் பெயரை குறிப்பிடாதது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது . ஜகமே தந்திரம் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ,இசையமைப்பாளர் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் படத்தின் ஹீரோவான தனுஷ் பெயரை குறிப்பிடாததற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் தனுஷ் ‘ஜகமே தந்திரம்’ டீசரை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .