ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்
மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி வருகின்ற 30_ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இவ்விழாவுக்கு விஜயவாடாவில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து தெலுங்கானா ஆளுனர் நரசிம்மன் மோகன் ரெட்டிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்கள் வரும் 6ம் தேதி பதவியேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பதவியேற்பு விழாவில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், திமுக தலைவர் முக ஸ்டாலின், உதய நிதி ஸ்டாலின் மற்றும் ஏராளமான தலைவர்கள் பங்கேற்றனர். முதல்வராக பதவியேற்ற ஜெகன் மோகன் இன்று மாலை டெல்லி சென்று மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்.