Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் ஏலம் பற்றி வாய்திறந்த ஜெய்தேவ் உனாட்கட்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டு மீண்டும் ஏலத்தில் வாங்கப்பட்ட இடக்கை வேகப்பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனாட்கட் முதல்முறையாக ஐபிஎல் ஏலம் பற்றி பேசியுள்ளார்.

2018ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்தேவ் உனாட்கட்டை ரூ. 11.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஏலத்தில் எடுக்கப்பட்ட தொகைக்கேற்ப சரியாக விளையாடாததால், விடுவித்தது. பின்னர் 2019ஆம் ஆண்டு சரியாக ஆடவில்லை என விடுவித்த ராஜஸ்தான் அணியே மீண்டும் உனாட்கட்டை ரூ.8.4 கோடிக்கு ஏலம் எடுத்தது.

கடந்த ஆண்டும் சொல்லிக்கொள்ளும்படியாக செயல்படாததால், அணியிலிருந்து ராஜஸ்தான் அணி விடுவித்தது. இதையடுத்து இந்தாண்டு வேறு அணிக்கு மாறுவார் என எதிர்பார்த்த நிலையில், மீண்டும் ராஜஸ்தான் அணியே அவரை ரூ.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் ராஜஸ்தான் அணியின், உனாட்கட்டும் எப்போதும் ட்ரால் மெட்டீரியலாகவே மாறினர். ஆனால் இது குறித்து உனாட்கட் எப்போதும் மனம் திறந்து பேசியதில்லை.

தற்போது முதல்முறையாக ஐபிஎல் ஏலம் பற்றி பேசியுள்ளார். அதில், ”சில நேரங்களில் ரசிகர்கள் நாங்களும் மனிதர்கள்தான் என்பதை மறந்துபோகின்றனர். ஏலத்திற்கு பின் என்னைப் பற்றி பதிவிடும் ஒவ்வொருவரிடமும் சென்று என்னை சரியாகப் புரிந்துகொள்ளுங்கள் என்று பேச முடியாது. என்னை வைத்து ட்ரால் செய்பவர்களில் சிலர் நகைச்சுவைக்காகவும், கவனம் ஈர்ப்பதற்காகவோதான் செய்கின்றனர். இதனால் என்னைப் பற்றி வரும் ட்ரால்களுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை.

என்னைப் பொறுத்தவரையில் நான் மீண்டும் அதே ராஜஸ்தான் அணிக்காகத்தான் ஆடப்போகிறேன். என்ன விலைக்கொடுத்து வாங்கினார்கள் என்பது பற்றி கவலையில்லை. இதுவரை எனது பந்துவீச்சில் என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட்டுள்ளேன்.

அதனால்தான் ஓவ்வொரு முறையும் விடுவித்து நிர்வாகம் மீண்டும் என்னைத் தேர்ந்தெடுக்கிறது. இந்தமுறை நான் என்ன செய்ய வேண்டும் என்றால், தவிர்க்க முடியாத வீரராக நினைக்கும் அளவிற்கு செயல்பட வேண்டும்.

ரஞ்சி டிராபி தொடரில் சவுராஷ்டிரா அணிக்காகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறேன். இதனைத் தொடர வேண்டும் என்பதே தற்போதைய இலக்கு” என்றார்.

Categories

Tech |