ஒவ்வொறு பிரகாசமான கண்களுக்குப் பின்னும் பல நூறு போராட்டங்களும், விடாமுயற்சியும் இருக்கும் என்பார்கள். அப்படி பலப் போராட்டங்களை எதிர்கொண்டு தான் எதிர்காலத்தில் சினிமாவிலும் அரசியலிலும் பெயர் எடுக்கப்போவதை அவர் சற்றும் நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்.
சில நேரங்களில் அனுபவமும், சூழ்நிலையும்தான் ஒருவரின் வாழ்க்கையை எதிர்பாராத விதமாக வடிவமைக்கும். அப்படியோர் வாழ்வின் உதாரணம் தான் ஜெயலலிதாவின் வாழ்க்கை. அவரது காலத்தில் பெயர் பெற்ற நடிகையாய் மட்டுமல்லாது, ஒரு சிறந்த முதலமைச்சருக்கான பொறுப்பையும் ஜெயலலிதா எடுத்துக்கொண்டார்.
ஒரு காலத்தில் கொடூரமான இந்தச் சமுகத்தைப் பார்த்து, தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்த அந்தச் சிறுமிதான், பிற்காலத்தில் திறமையான முதலமைச்சராக தன்னை உலகிற்கு தனித்துக் காட்டினார், ஜெயலலிதா. மேலும் சட்டப்பேரவையில் நுழையும்போது ஆளும் கட்சியினர் முன்பாக அவமதிக்கப்படும்போதும் ஊடகங்களுக்கு முன்பாக புன்சிரிப்பைக் காட்டி, வலிமையோடு நின்றார்.
காலம் செல்ல செல்ல வயதான அவர் தன் வலிமையைக் கூட்டிக்கொண்டே சென்றார். மக்கள் திடகாத்திரமான இரும்புக்கரங்களை மட்டுமே கண்டனர். 14 ஆண்டுகள் தன் வலிமையால் தமிழ்நாட்டைக் கட்டிப்போட்டார் ஜெயலலிதா. அவர் மேல் ஊழல் வழக்குகளும் குவியத் தொடங்கின.
68 வயதைக் கடந்த அந்த இரும்புப்பெண்மணியின் மரணம் மக்களை கண்ணீரில் ஆழ்த்தியது. அன்றைய முதலமைச்சரின் உடலைக் காண வந்த ஆயிரமாயிரம் மக்களை எதிர்கொள்ள முடியாமல் காவல் துறை திணறியது. பலரின் அழுகுரலும், மார்பில் அடித்துக்கொண்டு இடும் ஓலமும் எட்டுத்திக்கும் கேட்டது. அதுதான் ஜெயலலிதா சம்பாதித்த சொத்து.
அரசியல்வாதியாய் மட்டுமில்லாமல் மிகச்சிறந்த நடிகையாகவும் ஜெயலலிதா திகழ்ந்தார்.
சிறு வயதில் கூச்ச சுபாவமுள்ளவராகவும் அந்நியர்களைக் காண பயப்படுபவராகவும் அன்று ஜெ இருந்துள்ளார். தனது தாய் நடிகையாய் இருந்த காரணத்தினால் 10 வயது வரை, பெங்களூருவில் தனது பாட்டி வீட்டிலேயே ஜெ வளர்ந்து வந்தார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனது தாயார் தன்னை பெங்களூருவுக்கு வந்து, சந்தித்ததாக ஜெ ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அதேபோல், பார்த்து விட்டு தாயார் கிளம்பும்போதெல்லாம் தான் அழுததாகவும், அதனால் தன்னை உறங்க வைத்து விட்டு தாயார் செல்லுவார் என்று ஜெயலலிதா கூறினார்.
நடிப்பில் கிஞ்சித்தும் ஆர்வமில்லாத அவர்தான் பிற்பாடு குடும்ப சூழ்நிலைக் காரணமாக நடிக்க வந்தார். பிற்காலத்தில் திரையுலகில் மிக பிரபலமான முகமானார். அவரது அத்தனை வாழ்க்கைப் போராட்டங்களையும், பயணத்தையும் வைத்து ‘தலைவி’ என்கிற படம் தயாராகி வருகிறது. வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி வரவிருக்கிற படம் எப்படி இருக்கப்போகிறது என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.