பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் புதிய கட்டுப்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேற்று அறிவித்தார்.
பொங்கல் தினத்தை முன்னிட்டு, வருகின்ற 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும், 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. ஆனால் தமிழக அரசு, இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமை தாங்கினார். மேலும் மாணிக்கம் எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு சுஜீத் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய ஜல்லிக்கட்டு விழா குழுவினர், ஆண்டாண்டாக கொண்டாடப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் நேரம் குறைவாக கொடுக்கப்படுவதால் போதுமான அளவு காளைகளை களத்தில் இறக்க முடியவில்லை. ஆகவே இந்த முறை கூடுதலாக நேரம் ஒதுக்க வேண்டும். அதே போன்று அனைத்து மாடுபிடி வீரர்களுக்கும் நேரத்தை ஒதுக்கி களத்தில் இறங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினர்.
அதன்பின் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேசியதாவது, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு விதிகளை கடைபிடித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனை, அனைத்துத் தரப்பினரும் ஏற்று ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் என அனைவருக்கும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
இப்பரிசோதனை ஜல்லிக்கட்டு நடைபெறும் 48 மணி நேரத்திற்கு முன்பு செய்யப்படும். எனவே போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் அனைவரும் கட்டாயமாக பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படுவார். தொற்று உறுதி செய்யப்பட்டவர் போட்டியில் பங்கேற்க அனுமதி இல்லை. இந்த பரிசோதனைகான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செயல்படுத்தப்படும்.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் காலை 8 மணி முதல் பகல் 3 மணி வரை மட்டுமே நடைபெறும். 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியிலும் அனுமதிக்கப்படுவார்கள். அந்த எண்ணிக்கையிலேயே டோக்கன்களும் வழங்கப்படும். ஆறு சுற்றுகளாக பிரிக்கப்படும் களத்தில் ஒவ்வொரு சுற்றுகளிலும் 50 மாடுபிடிவீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
டோக்கன் வழங்கும் பணியினை வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்பு துறை மற்றும் விழாக் குழுவினர் ஆகியோர் மேற்கொள்வார்கள். அரசின் உத்தரவின்படி 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.அவர்களுக்கு அங்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்பு தான் பார்வையாளர்களின் பகுதிக்கு அனுப்பப்படுவார்கள். அது மட்டுமின்றி அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.