கொரோனா தடுப்பு ஊசி மருந்து வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும் என அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை உதவி செயலர் டாக்டர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க இந்தியா உட்பட பல நாடுகளும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. அமெரிக்காவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு பரிசோதனையில் உள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறிவருகிறார். இன்னும் ஒரு மாதத்திற்குள் தடுப்பூசி வந்துவிடும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா தடுப்பு ஊசி மருந்து வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும் என அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை உதவி செயலர் டாக்டர் இராபர்ட் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு ஊசி மருந்தை பாதுகாப்பான முறையில் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு தடுப்பூசி மருந்துக்கான அங்கீகாரம் கிடைத்துவிடும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிபர் டிரம்ப் முடிந்தவரை விரைவாக தடுப்பூசி விநியோகிக்க பட வேண்டுமென விரும்புவதால் ஜனவரிக்கு முன்னதாக தடுப்பூசி வினியோகம் துவங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என டாக்டர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.