தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகையை இரண்டு மடங்காக அதிகரித்து முதல்வர் வெளி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சேலம் எடப்பாடியில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கியுள்ளார். இதையடுத்து பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர் அடுத்த ஆண்டு பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் பணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். துண்டுக் கரும்புகளுக்கு பதிலா ஒரு முழுநீள கரும்பு அளிக்கப்படும் என அவர் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு ஜனவரி 4ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இதற்கான டோக்கன் வீடு வீடாக சென்று வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். டோக்கண்களில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் ரேஷன் அட்டைதாரர்கள் நேரடியாக வந்து பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் 2 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று அவர் தெரிவித்தார். வழக்கமாக ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 1000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்குவது வழக்கம்.
இந்த முறை இரண்டு மடங்காக அதிகரித்து தமிழக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அடுத்த சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மக்களைக் கவர ஆளுங்கட்சி வகுத்துள்ள வியூகமாக இதை சிலர் பார்க்கின்றனர். அதே சமயம் கொரோனா ஊரடங்கால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் மக்களுக்கு அரசின் அறிவிப்பு சற்று ஆறுதலாக இருக்கின்றது என்று கூறுகின்றனர்.
கொரோனா பாதிப்பால் தமிழக அரசு பெரும் நிதிச்சுமையில் இருக்கும் சூழலில் பொங்கல் பரிசு அறிவிப்பு மேலும் சுமையாக மாறக்கூடும். ஆனால் அவற்றை சமாளிக்கும் திறன் மாநில அரசுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. இலவசங்களுக்கு பதிலாக வேலைவாய்ப்பு பெருக்கும் நோக்கில் திட்டங்களை செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.