ஜப்பான் நாட்டில் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்ன தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் நாட்டில் வடகிழக்கு பகுதியில் உள்ள புகுசிமா மாகாணத்தில் நேற்று காலை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது. மேலும் இது பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாகவும் தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் வீடுகள் அனைத்தும் குலுங்கியுள்ளது.
இதனால் பீதி அடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே வீதிகளில் தங்கியுள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தை குறித்து சேத விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை. அதேபோல் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் நெருப்பு வளையம் என அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரக்கூடிய இடத்தில் ஜப்பான் நாடு அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன என ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.